×

நாட்டின் பங்குச்சந்தை ரகசியங்கள் இமயமலை சாமியாருக்கு பகிர்ந்த விவகாரம்; செபியின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் அதிரடி கைது.!

சென்னை: பங்குச்சந்தை ரகசியங்களை இமயமலையில் உள்ள சாமியாருக்கு இ-மெயில் மூலம் பகிர்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் செபியின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையின்(செபி) நிர்வாக தலைமை அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றினார். அவரது பணி காலத்தில் நாட்டின் பங்கு சந்தை ரகசியங்கள் குறித்து சட்டத்திற்கு விரோதமாக இமயமலையில் உள்ள சாமியார் ஒருவருக்கு இ-மெயில் மூலம் பகிர்ந்து வந்ததாகவும், சாமியார் கூறும் ஆலோசனைப்படி சித்ரா ராமகிருஷ்ணன் நாட்டின் பங்கு சந்தை நிலவரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நாட்டின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தியது. அதில் தலைமை அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் தனது மின் அஞ்சல் மூலம் இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரிடம் ரகசியங்களை பகிர்ந்து கொண்டதும், அதேபோல், அலுவலகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் முதல் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் வரை உள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஊதியங்கள் குறித்தும் தகவல்கள் அனுப்பியது தெரியவந்தது. மேலும் இமயமலை சாமியார் பரிந்துரை செய்த ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தை சட்டத்திற்கு எதிராக தன்னிச்சையாக சித்ரா ராமகிருஷ்ணன், பங்குச்சந்தை ஆலோசகராக ஆனந்த் சப்ரமணியனை நியமித்துள்ளார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.15 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.1.68 கோடி வழங்கியுள்ளார். வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் பணிக்கு வரலாம், அதுவும் அவர் விரும்பிய நேரத்தில் வந்து பணியாற்றலாம் என்று சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டிருந்தது. இதுதவிர கடந்த 2014ம் ஆண்டு ஆனந்த் சுப்ரமணியனின் ஊதியத்தை சித்ரா ராமகிருஷ்ணன் விரும்பிய சாமியாரின் உத்தரவுப்படி 20 சதவீதம் உயர்த்தி ஆண்டுக்கு ரூ.2.31 கோடியாக அதிகரித்துள்ளார். மேலும், ஆனந்த் சுப்ரமணியனுக்காக மட்டும் கடந்த 2015ம்  ஆண்டில் சாமியாரின் பரிந்துரைப்படி தன்னிச்சையாக ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஆனந்த் சுப்ரமணியன் பங்குச்சந்தையின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு இடைத்தரகர்கள் பயன் அடையும் வகையில் தேசிய பங்குச்சந்தையில் விதிகள் மாற்றியிருப்பதும் உறுதியானது. இதன் மூலம் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்திற்கு பல நூறு கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து அனைத்து ரகசியங்களும் விசாரணை ஆணையத்திற்கு தெரியவந்ததை தொடர்ந்து தேசிய பங்குச்சந்தையின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து சித்ரா ராமகிருஷ்ணன் தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டின் படி அவரது பணிக்காலத்தில் தேசிய பங்குச் சந்தை நிர்வாகத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன் மற்றும் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியனுக்கு தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முறைகேடு நடப்பது தெரிந்தும் அதை தடுக்காமல் இருந்ததாக தேசிய பங்குச்சந்தையின் ஒழுங்கு அதிகாரி நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மோசடி குறித்து மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் சிபிஐயிடம் புகார் அளித்தது. அந்த புகாரின்படி மும்பை சிபிஐ மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அதில் இமயமலையில் உள்ள சாமியார் ஒருவருக்கு தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் இ-மெயிலில் இருந்து நாட்டின் ரகசியங்கள் பகிர்ந்தது தெரியவந்தது. மேலும், சாமியாரின் பரிந்துரைப்படி தான் தேசிய பங்குச்சந்தையின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததும் உறுதியானது. அதைதொடர்ந்து முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான மும்பை, டெல்லி, சென்னையில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல்  ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த ஆனந்த் சுப்ரமணியனுக்கு சொந்தமான மும்பை வீடு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தேசிய பங்குச்சந்தையின் டிஜிட்டல் வடிவில் உள்ள முக்கிய ஆவணங்கள், சாமியாருக்கு அனுப்பிய இ-மெயில் ஆவணங்கள் என நாட்டின் ரகசியங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷணன், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அனைத்து உண்மை என்று தெரியவந்தது.  இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் அளித்த 192 பக்க அறிக்கையின் படி சிபிஐ முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது கடந்த பிப்ரவரி 11ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ரவி நரேன் அளித்த வாக்குமூலத்தின் படி சாமியார் பரிந்துரை செய்த தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனை மும்பை சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனிடம் 2 மணி நேரத்திற்கு மேல் சாமியாருக்கும் சித்ரா ராமகிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்புகள் என்ன? எதன் அடிப்படையில் தேசிய பங்குச்சந்தைக்கு ஆலோசகராக உங்களை நியமித்தனர். அதற்கான காரணம் என்ன? இமயமலையில் உள்ள சாமியார் யார்? அவர் பெயர் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். 2 மணி நேரம் தீவிர விசாரணைக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனை விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து சென்றனர்….

The post நாட்டின் பங்குச்சந்தை ரகசியங்கள் இமயமலை சாமியாருக்கு பகிர்ந்த விவகாரம்; செபியின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் அதிரடி கைது.! appeared first on Dinakaran.

Tags : himalayan ,samiyar ,sebi ,anand subramyan ,Chennai ,National Exchange ,Chamiyar ,Himalayas ,Sepi ,Anand Subramanian ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்